அத்தியாயம் – 1 – ஆரம்பம் – பகுதி – 2 – மனதின் நிலைகள்

நேற்று மனம் என்றால் என்ன? அது எப்படி உடலுடன் சேர்கிறது? என்றெல்லாம் பார்த்தோம். இதை படித்த உங்களுக்கு நிச்சயம் மனதை பற்றிய சில கேள்விகளும் சந்தேகங்களும் வந்திருக்கும். அதனை விளக்கும் வகையில் மனதின் பல்வேறு நிலைகளை இன்று பார்ப்போம்.

முட்டையை எடுத்துக்கொண்டால் எப்படி மேல் ஓடு, அப்புறம் வெள்ளை கரு அப்புறம் மஞ்சள் கரு என பிரிந்திருக்கிறதோ அப்படியே மனமும் மூன்று நிலைகளாக பிரிந்திருக்கிறது. அவை

௧. உணர்வு மனம் (Concious Mind)
௨. ஆழ் மனம் (Subconcious Mind)
௩. மிகுந்த மனம் (Superconcious Mind)

உணர்வு மனமே நாம் வாழ்க்கையில் மிகுதியாக உபயோகிக்கும் மனது. நம் சிந்தனைகள், புலன் அனுபவங்கள், எல்லாமே இந்த உணர்வு மனதில்தான் நடக்கிறது. இந்த உணர்வு மனதில் இருந்து எது தேவையோ அதை நாம் filter பண்ணி ஆழ் மனதிற்கு அனுப்புகிறோம். பல நேரங்களில் இந்த process தானாகவே நடக்கிறது, நாம் அறியாமலே. ஆகவே ஆழ் மனம் என்பது இந்த ஜென்மத்தில் நம்முடைய அனுபவங்களை சேகரிக்கும் பெட்டகமாக விளங்குகிறது.

மிகுந்த மனம் எனப்படும் Superconcious Mind என்பது ஜென்மங்கள் கடந்து நம்முடன் வரும் நிரந்திர பெட்டகம். இதுவரையில் நாம் எடுத்துள்ள அத்தனை ஜென்மங்களின் விவரங்கள், அனுபவங்கள் எல்லாம் இங்கே இருக்கிறது. இந்த ஜென்மம் முடிந்தபின்னே இந்த ஜென்மத்தின் விவரங்களும் அங்கே போய் சேரும். இந்த மனது தான் நம்முடைய சூட்சம உடலுடன் வருகிறது. இந்த மனமே ஆத்மா ஓர் உடலை சேர்ந்தவுடன் மூளையுடன் தொடர்பு வைத்து அதற்கு உணர்வை கொடுக்கிறது.

ஆன்ம சாதகன் முன்னேறி முக்தி நிலையை அடைய, கொஞ்சம் கொஞ்சமாக உணர்வு மனத்தை விடுவான், பின் ஆழ் மனத்தை விடுவான், கடைசியில் இந்த மிகுந்த மனதையும் விட்டுவிட்டு பிரம்மத்துடன் ஒன்றி விடுவான்.

இன்னமும் சுலபமாக புரிய நாம் கணினி டெக்னாலஜியை  உவமையாக கொள்ளலாம்.

உணர்வு மனம் – கணினியில் உள்ள RAM

ஆழ் மனம் – Harddisk

மிகுந்த மனம் – External Harddisk

ஆத்மா உடல் எடுத்தவுடன் அந்த உடலுக்கு உணர்வு கொடுத்தவுடன் மிகுந்த மனம் அமைதி ஆகிவிடுகிறது. அதன் பின் உணர்வு மனம் control எடுத்துக்கொண்டு அனுபவங்களை ஆழ் மனதிற்கு கொடுக்கிறது. அதனால் மனிதனின் மூளை எனும் கருவி இல்லாமல் உணர்வு மனம் இல்லை, உணர்வு மனம் கொடுக்காமல் ஆழ் மனதிற்கு அனுபவங்கள் கிடைப்பதில்லை. மிகுந்த மனமோ ஆழ் மனம் கொடுக்கும் அனுபவங்களையே தன்னுள் நிரந்தரமாக சேமித்து வைத்துக்கொள்கிறது.

அதே போல நாம் intiution என சொல்லும் பின்னே நடப்பது முன்கூட்டியே தெரிவது, யாரையாவது பார்த்தால்  உடனே ஏதோ ஒரு தொடர்பு இருப்பது போல தெரிவது, ” ஏதோ ஒரு ஜென்மத்துல தொடர்பு இருந்திருக்கு சார் அதனாலதான் உங்களை பார்த்த உடனே எனக்கு இப்படி தோணுது” என்று சொல்வதும், “மனசுல ஒரு பட்சி சொல்லித்து சார், இப்படிதான் நடக்கும்னு, அப்படியே நடந்தது சார்” என சொல்வதும், நம்மை அறியாமலே நம்முடைய ஆழ் மனம், மிகுந்த மனதிடம் உதவி கேட்டு, பெற்று உணர்வு மனதிற்கு அனுப்பும் தகவல்களே. ஆகவே இது இரு வழி communication என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.

மூளை மற்றும் பல நிலைகள் உள்ள மனம் ஆகியவை ஒரு டீம் என்றே நாம் கொள்ளவேண்டும் ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை.

Conciousness இல்லாமல் இயக்கம் இல்லை. நம் உடலுக்கு இந்த உணர்வை கொடுப்பது மனம். இதில் ஆத்மா அனுபவிப்பாளன் மட்டுமே. கல்வி கற்க வந்திருக்கிறோம், உணர்வுகள் கொடுக்கும் பாடத்தை படித்து செம்மையாக வாழ்ந்து முன்னேறி செல்கிறோம். இந்த பெரும் பயணம் உணர்வு இல்லாமல் இல்லை. தனி மனிதன் என்ற அளவிலேயே உணர்வு இல்லாமல் இயக்கம் இல்லை என்றபோது, அகிலம் எனப்படும் universeஇன் நிலை?

அகிலம் இயங்க வேண்டும் எனில் உணர்வு வேண்டும். இல்லாவிட்டால் இயக்கம் இல்லை. விஷ்ணு தன்னுடைய மூச்சு காற்றாகிய உணர்வை வெளியிடவில்லை என்றால் அகிலம் வெறும் ஜடமே. அப்படியே மிகுந்த மனது உணர்வு கொடுக்கவில்லை என்றால் மனித உடல் வெறும் ஜடமே.

எல்லாவற்றிற்கும் ஆரம்பம், பகவான் விஷ்ணுவின் மூச்சே.

நாளை விஷ்ணுவின் மூச்சிலிருந்து இந்த நெடும் பயணத்தை ஆரம்பிக்கிறோம். தொடர்ந்து படியுங்கள், உங்களின் கருத்துக்களை, எனக்கு தெரிவியுங்கள்.

 

 

அத்தியாயம் – 1 ஆரம்பம் – பகுதி – 1

Photo by Jenna Norman on Unsplash

மனிதன் என்பவன் உடல் மட்டுமல்ல. உடல் வெறும் கருவி தான். இந்த கருவியை இயக்குவது மனம் எனும் மாய வஸ்து. இது கண்ணுக்கு தெரியாதது. இந்த கண்ணுக்கு தெரியாத மனம் எனும் வஸ்து ஆன்மீகத்தில் முன்னுக்கு வராத ஒருவனுடைய இறப்பிலும் அவனை விடுவதில்லை.

பக்குவப்படாத மனிதன் இறக்கும்போது, அவனுடைய சூட்சம உடம்பு அவனுடைய எண்ணங்கள், ஆசைகள் ஆகியவற்றை விதைகள் போல அடுத்த பிறவிக்கு எடுத்துசெல்லும், என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்.

ஆக மனிதன் தான் ஆத்மா, உடல் அல்ல என உணர்ந்தும் அவன் மிக முக்கியமான ஒரு விஷயத்தை விடவேண்டும் அது மனம். அப்பொழுதுதான் அவனுக்கு முக்தி கிடைக்கும். இது ஞானிகள் வாக்கு.

இப்பேர்பட்ட முக்கியமான மனதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். அப்படி புரிந்துக்கொள்ள முயற்சிக்கும்போது நாம் மூளையையும் சேர்ந்து புரிந்துக்கொள்ளவேண்டும்.

அப்பொழுது தான் மனிதனால் முழுமையான வளர்ச்சி அடையமுடியும்.

இந்த தொடரில் நாம் மனம், மூளை என இந்த இரண்டு விஷயங்களை பத்தி விவரமாக பார்க்க போகிறோம்.

எண்ணங்களின் பெட்டகமே மனம் என்கின்றனர் ஆன்றோர். இந்த எண்ணங்களின் பெட்டகமான மனம் எப்பொழுது உருவாகிறது என பார்த்தால் ஆத்மா எப்பொழுது உருவானதோ அப்பொழுதே மனம் உருவாகிவிடுகிறது. ஆத்மா முன்னேற வேண்டும் எனில் அதற்கு அனுபவங்கள் தேவை, அந்த தேவையை பூர்த்தி செய்யவே மனம் படைக்கப்பட்டிருக்கிறது.

அது ஆன்மாவின் பயணத்தில் தொடர்ந்து வருகிறது. மனதில் உள்ள அனுபவங்களே ஆன்மாவை செம்மைபடுத்தும் ஞானம் ஆகும். இப்படி பல ஜென்மாக்கள் எடுத்து பல அனுபவங்களை பெற்று, ஒரு உயர் நிலையில் ஜென்மா எடுக்கும்போதுதான் அந்த ஆத்மாவுக்கு புரியும் சர்வ சக்தி படைத்த பிரம்மத்தை அடைய மனதில் எந்த வித சலனமும் இருக்கக்கூடாது என்று.

அந்த நிலையில் ஒரு சாதகன் செல்லும்போதுதான் அவனுக்கு பிரும்மம் தன்னுடைய சுயத்தை காட்டுகிறது, அவன் உண்மையை உணர்ந்துக்கொள்கிறான்.

ஆக ஆத்மா தன்னை உருவாக்கியவனிடம் சென்றடைய மனம் தேவைப்படுகிறது. இது மனத்தின் முக்கியத்துவத்தை நமக்கு புரிய வைக்கிறது.

அடுத்ததாக எப்படி ஒரு மனதிற்கு அனுபவங்கள் கிடைக்கின்றன என்பதை பார்ப்போம்.

பக்குவப்படாத ஆத்மா முன்னேற வேண்டும் எனில் அதற்கு உடம்பு தேவை. உடம்பில் தான் ஐந்து அவயங்களின் மூலமாக மனம் தன்னுடைய அனுபவங்களை பெற்றுக்கொள்கிறது, தன்னையும் வெளிக்காட்டிக்கொள்கிறது. அவை கண் – பார்த்தல், காது – கேட்டல், வாய் – சுவைத்தல், நாசி – முகர்தல், கைகள் – தொடுதல்.

வெறும் மனம் இந்த அவையங்களை இயக்க போதாது. அதற்கு ஒரு கருவி வேண்டும். அந்த கருவியே மூளை. ஆம் மூளை வெறும் கருவி தான். மனம் எனும் மாய வஸ்துவே இயக்குபவன், ஆத்மா அனுபவிப்பவன். இப்படிதான் மனிதன் உருவாக்கப்பட்டு இருக்கறான்.

மனம் தனியாக செயல்பட முடியாது என்பதற்கு இன்னொரு உதாரணம், மூளை செயலிழந்து விட்டால் மருத்துவர்கள் அந்த உடம்பை, மூளை சாவு என சொல்லிவிடுகிறார்கள் அல்லவா? மூளை போனால் என்ன, மனம் தான் இருக்கிறதே என்று யாரும் சொல்வதில்லை.

ஆகையால், ஒரு ஆன்மா பிறப்பெடுக்க முடிவெடுத்தப்பின் தாயின் கருவறையில் உறைந்த பின்னே, மனம் ஆனது அந்த உடலின் மூளையுடன் தன்னை இணைத்துக்கொள்கிறது. இணைத்துக்கொண்டு, தன்னுடைய சுயத்தை மூளைக்குள் செலுத்துகிறது.
அதுவரையில் பிண்டமாக இருக்கும் உடம்பு உயிர் பெறுகிறது.

ஆதியில் எல்லாமே ஜடம் என்ற நிலையில் இருந்தபோது எப்படி மகா விஷ்ணு தன்னுடைய மூச்சுக் காற்றை வெளியிட, ஜடமாக இருந்த ஆண்ட சராசரமும் உயிர்பெற்று தங்களின் இயக்கத்தை தொடங்கியதோ, அப்படியே ஒவ்வொரு தாயின் கருவறையிலும் எதோ ஒரு ஆத்மாவின் மனம் எனும் மாய வஸ்து, மூளையில் தன்னை பொருத்திக்கொண்டு அதற்கு Consciousness எனும் தன்னுடைய சுயத்தை கொடுப்பதன் மூலம் உடம்பு எனும் ஜடத்திற்கு உயிர் கொடுக்கிறது.

ஆக ஒவ்வொரு தாயின் வயிற்றிலும் ஒரு big bang நிகழ்ச்சி அதன் அளவில் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

தொடரும்…..

%d bloggers like this: